பூவரசன் பீப்பி, சில்லுக்கருப்பட்டி உள்ளிட்ட படங்களை இயக்கியவர் ஹலிதா சமீம். இவர் அடுத்து ஏலே எனும் திரைப்படத்தை இயக்கி இருக்கிறார். இந்த திரைப்படம் மாசி 12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக முன்னதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் இதில் எழுந்த சிக்கல் நீடித்தது. இதுதொடர்பாக பாரதிராஜாவும் தனது தரப்பில் இந்த படத்தை ஆதரித்து, திரையரங்க உரிமையாளர்களை நோக்கி ஒரு அறிக்கை விட்டிருந்தார்.
பேச்சுவார்த்தைக்கு திரையரங்க அமைப்புகள் வரவில்லை என்றும் பாரதிராஜா அதில் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இந்த திரைப்படம் நேரடியாக ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் வெளியாவதாக படக்குழுவினர் அறிவித்திருக்கின்றனர்.
இது தொடர்பாக தயாரிப்பாளர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஏலே திரைப்படம் வெளியாக, மூன்று நாட்களே இருந்த நிலையில் திரையரங்குகள் விதித்துள்ள சில ஆச்சர்யகரமான புது விதிகளாலும்,
தவிர்க்க முடியாத காரணங்களாலும் படத்தை உலக ரசிகர்களுக்கு எடுத்துச் செல்லும் வகையில் ஸ்டார் விஜய் தொலைக்காட்சியுடன் இணைந்து 2021 மாசி 28ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை பகல் 3 மணிக்கு நேரடியாக வெளியிடுவதாக படக்குழு குறிப்பிட்டுள்ளது.
தயாரிப்பாளர் வை நொட் ஸ்டுடியோ சசிகாந்த் இது பற்றி கூறும் பொழுது, “புதிய வகை கதைகள் கொண்ட திரைப்படங்களை துணிவுடன் தயாரிக்கும் நிறுவனம் என்னும் பெயரை வை நொட் ஸ்டுடியோஸ் பெற்றுள்ளது.
இந்த துணிவு, படங்களின் கதைகளில் வித்தியாசம் காட்டுவதுடன் தயாரிப்பு தரப்பில் அனைத்து வகை திட்டமிடுதலிலும் புதுமையை கடைபிடிப்பதில் முன்னணி வகிக்கிறது.
மனித உணர்வுகளை வாழ்வியலின் அழகியலோடும் நகைச்சுவையோடும் எதார்த்தக் கூறுகளுடனும் கொண்டிருக்கும் ஏலே திரைப்படத்தை இயக்குநர் ஹலிதா சமீம் மிக அழகாக உருவாக்கி இருக்கிறார்.
குடும்பங்கள் இணைந்து கொண்டாடுவதற்கான மிகச்சரியான படைப்பு இது. அத்தகைய பார்வையாளர்களை அதிகம் கொண்டிருக்கும் ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் இந்த படம் வெளியிடப்படுவது எங்களுக்கு பெரும் மகிழ்ச்சி என்று குறிப்பிட்டிருக்கிறார்.
இது பற்றி பேசிய இயக்குநர் ஹலிதா சமீம், “ஏலே படம் பெரும் எண்ணிக்கையிலான பார்வையாளர்களை சென்றடைய உள்ளது. இயக்குனராக எனது பயணம் ஆரம்பமாவதற்கு முன்பே என் மனதில் நெருக்கமான படைப்பாக ஏலே இருந்தது.
#Aelay Exclusive World Premiere on @vijaytelevision !
Tune in on Feb 28 at 3PM #AelayFromFeb28 #AelayOnVijayTV@thondankani @halithashameem @sash041075 @PushkarGayatri @chakdyn @Shibasishsarkar @StudiosYNot @RelianceEnt @wallwatcherfilm @APIfilms @SonyMusicSouth @SureshChandraa pic.twitter.com/enctipEZTw— Y Not Studios (@StudiosYNot) February 11, 2021
இப்போது ஒரே நாளில் ஏலே படம் சென்றடைவதை காண மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இப்படத்தை உலகம் முழுவதும் வெளியிடும் ஸ்டார் விஜய் தொலைக்காட்சிக்கு எனது நன்றிகள்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
சமுத்திரகனி, மணிகண்டன் ஆகியோர் நடிப்பில் இயக்குநர் ஹலிதா சமீம் எழுதி இயக்கியிருக்கும் ஏலே திரைப்படத்துக்கு கேபர் வாசுகி, அருள்தேவ் இசையமைத்துள்ளனர். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.