மியன்மார் இராணுவப் புரட்சியுடன் தொடர்புடைய மியன்மார் தலைவர்கள் மீது தடைகளை விதிப்பது தொடர்பிலான நிர்வாக உத்தரவுக்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன் ஒப்புதல் வழங்கியுள்ளார்.
மியன்மார் இராணுவத் தலைவர்கள், அவர்களது குடும்பத்தினர் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய வர்த்த நடவடிக்கைகள் மீது தடைகள் அமுல்படுத்தப்பட்டுள்ளன.
அத்துடன், அமெரிக்காவினால் வழங்கப்பட்ட ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவியை நிறுத்தும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
மியன்மாரில் ஆட்சிக் கவிழ்ப்பு மற்றும் தலைவர்களின் விடுதலையை வலியுறுத்தி முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போது பெண்ணொருவர் மீதான துப்பாக்கிப் பிரயோகத்தை தொடர்ந்து குறித்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
போராட்டங்களை கட்டுப்படுத்துவதற்காக மக்கள் ஒன்றுகூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் மியன்மாரில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
போராட்டத்தை ஒடுக்குவதற்காக இராணுவத்தினர் அடக்குமுறைகளில் ஈடுபடுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனிடையே, மியன்மாரின் ஆட்சிக் கவிழ்ப்பு மற்றும் அடக்குமுறைகளுக்கு எதிராக சர்வதேச ரீதியில் கண்டனங்கள் வலுப்பெற்றுள்ளன.