வவுனியாவில் ஐந்து அம்ச கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம்!

வவுனியா பூந்தோட்டம் சிறிநகர் கிராமமக்கள் ஐந்து அம்ச கோரிக்கைகளை முன்வைத்து சத்தியாக்கிரக போராட்டத்தில் இன்று (09.02.2021) ஈடுபட்டுள்ளனர்.

20 வருடங்களாகியும் தமது கிராமத்திற்கு காணி, உரிமைப்பத்திரங்கள் வழங்கப்படவில்லை, உட்கட்டுமான வசதிகள் செய்துதரப்படவில்லை, மைதானம் இன்மை,வீட்டுத்திட்டம் வழங்காமை போன்ற கோரிக்கைகளை முன்வைத்தே குறித்த சத்தியாக்கிரக போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது கருத்து தெரிவித்த அவர்கள்,

பலவருடங்கள் ஆகியும் எமது கோரிக்கைகளிற்கு தீர்வு கிடைக்கவில்லை. இது தொடர்பாக ஜனாதிபதி நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஆளுனர், அரச அதிகாரிகளிற்கு தெரியப்படுத்தியும் எமது விடயத்தில் எவரும் கரிசனை கொள்ளவில்லை.உட்கட்டுமானம் சீரின்மையால் மழைக்காலங்களில் வீடுகளில் நீர்தேங்கி நிற்கிறது.

காணி உரிமைப்பத்திரம் வழங்கினால் அதனை வங்கிகளில் வைத்து கடன்பெற்றாவது வீடுகளை கட்டிக்கொள்ளமுடியும். அதுவும் வழங்கப்படவில்லை. அத்துடன் கிராமத்திற்கு அருகில் அமைந்துள்ள புனர்வாழ்வு இணைப்புகாரியாலயம் மற்றும் தேசிய கல்வியியற்கல்லூரிகளில் இருந்து வெளிவரும் கழிவுநீர் எமது கிராமத்திற்குள்ளேயே வருகிறது.

எமது அடிப்படை கோரிக்கைகள் தொடர்பாக அதிகாரிகளால் பலமுறை வாக்குறுதிகள் வழங்கியும் எவரும் அதனை தீர்த்துவைக்கவில்லை. எமாற்றமே மிஞ்சியது. எனவே எமது கோரிக்கைகளிற்கு தீர்வு கிடைக்கும் வரை தொடர் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு பிரதேச செயலாளர் ந.கமலதாசன், பிரதேச சபை தவிசாளர் து.நடராஜசிங்கம் ஆகியோர் சென்றிருந்ததுடன் மக்களுடன் கலந்துரையாடியிருந்தனர். முதற்கட்டமாக கிராமத்தில் உள்ள 95 பேருக்கு காணி உறுதிப்பத்திரங்களை வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன், ஏனைய காணிகள் குளத்தின் ஒதுக்கத்திற்குள் வருகிறது.

அதனை உரிய திணைக்களம் விடுவித்து தந்தால் அதற்கான உறுதிகளையும் வழங்கமுடியும்.என்று பிரதேச செயலாளர் தெரிவித்ததுடன் ஏனைய பிரச்சனைகள் தொடர்பாக சாதகமாக ஆராய்வதாக தெரிவித்திருந்தார். கிராமத்தினையும் பார்வையிட்டிருந்தார்.

இதேவேளை கிராமத்தின் பின்பகுதியில் குளத்தின் நீரேந்து பகுதியில் 55 பேரது காணிகள் அமைந்துள்ளது. அதனை விடுவிப்பது தொடர்பாக எமது தலைமை அலுவலகமே தீர்மானிக்கமுடியும்.

எனவே நீங்கள் கோரிக்கைகளை வழங்கினால் மேலதிக நடவடிக்கைகளிற்காக அதனை எமது தலைமை அலுவலகத்திற்கு அனுப்பிவைப்பதாக போராட்டகாரர்களை சந்தித்த நீர்பாசன திணைக்களத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். எனினும் குறித்த மக்களின் போராட்டம் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

More Stories
இலங்கையில் முதலாவது கொவிட்-19 தடுப்பூசி செலுத்தப்பட்டது!