கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக மூடப்பட்டிருந்த கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையம் இன்று வியாழக்கிழமை(21) மீண்டும் சுற்றுலாப் பயணிகளுக்காகத் திறக்கப்படுகிறது.
நாட்டில் நிலவிய கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் நிலைமை காரணமாக கடந்த வருடம் பங்குனி மாதம்- 19 ஆம் திகதி மேற்படி விமான நிலையம் சுற்றுலாப் பயணிகளுக்காக மூடப்பட்டது.
அரசாங்கம் மீண்டும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு அழைத்து வரும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ள நிலையில் சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றிச் சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்குள் பிரவேசிப்பதற்கான முன்னேற்பாடுகளை மேற்கொண்டுள்ளது.
இன்றைய தினம் விமான நிலையம் திறக்கப்பட்டதன் பின்னர், இலங்கையர்களை ஏற்றிய முதலாவது விமானம் நாட்டை வந்தடைந்துள்ளது.
ஓமானின் மஸ்கட் நகரிலிருந்து 50 இலங்கையர்கள் குறித்த விமானத்தின் மூலம் நாட்டை வந்தடைந்ததாக கட்டுநாயக்க விமான நிலைய கடமை நேர முகாமையாளர் தெரிவித்துள்ளார்.
இவர்களை தவிர, மாலைதீவு, பாகிஸ்தான், துருக்கி மற்றும் பஹ்ரைன் உள்ளிட்ட நாடுகளிலிருந்தும் மேலும் 300 இலங்கையர்கள் இன்று (21.01.2021) நாட்டை வந்தடையவுள்ளதாக கொவிட்-19 தொற்றுப் பரவலை தடுக்கும் தேசிய செயலணி தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்று நிலைமை காரணமாக மூடப்பட்டிருந்த கட்டுநாயக்க மற்றும் மத்தளை சர்வதேச விமான நிலையங்கள் 9 மாதங்களின் பின்னர் இன்று (21) முதல் சுற்றுலா பயணிகளுக்காக மீள திறக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.