மட்டக்களப்பு வாழைச்சேனை கறுவாக்கேணி குறுக்கு வீதியோரத்தில் நபர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை காவல் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.
இன்று உறவினர்கள் வழங்கிய தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் சடலத்தை மீட்டுள்ளனர்.
சடலமாக மீட்கப்பட்டவர் வாழைச்சேனை கறுவாக்கேணி பிரதான வீதியில் வசிக்கும் நான்கு பிள்ளைகளின் தந்தையான வேலாயுதப்பிள்ளை தங்கராசா வயது 59 என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குறித்த நபர் தனது கறுவாக்கேணி பாரதி வீதியிலுள்ள வீட்டிற்கு சென்று வருவதாக கூறிச் சென்றுள்ளார். அங்கிருந்து மீண்டும் வீட்டுக்குத் திரும்பாத நிலையில், குடும்பத்தார் தேடிச் சென்ற சமயம் வீதியோரத்தில் சடலமாக காணப்பட்டதையடுத்து வாழைச்சேனை காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
குறித்த இடத்திற்கு வருகை தந்த திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம்.நசீர் விசாரணைகளை மேற்கொண்ட நிலையில் சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
குறித்த மரணம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை காவல்துறையினர் மேற்கொண்டு வருவதாக வாழைச்சேனை காவல் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன மேலும் தெரிவித்தார்.