பார்க் & ரைட் பேரூந்து சேவை இன்று முதல் ஆரம்பம்

கொழும்பு நகரில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வாக அறிமுகப்படுத்தப்பட்ட ‘பார்க் & ரைட்’ பஸ் சேவையின் முதல் கட்டம் கொட்டாவை, மாகும்புர பன்முக போக்குவரத்து மத்திய நிலையத்தை மையப்படுத்தி ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவினால் இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

கார் மற்றும் மோட்டார் சைக்கிள் பயணிகளுக்கு வசதியான, பாதுகாப்பான பொதுப் போக்குவரத்து பஸ் சேவையை வழங்குவதன் மூலம் கொழும்பு மற்றும் புறநகர்ப் பகுதிகளுக்கு பயணிக்கும் வாகனங்களின் எண்ணிக்கையை குறைப்பதே இதன் நோக்கம்.

இது சூழல் மாசடைதல், கால விரயம் மற்றும் பயணிகளின் மன அழுத்தத்தை குறைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஆசனங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பயணிகளை ஏற்றிச் செல்ல சொகுசு பஸ்கள் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. கட்டணம் சாதாரண பஸ் கட்டணத்தை விட இருமடங்காகும்.

குறிப்பிட்ட பஸ் நிலையங்களில் குறைந்த எண்ணிக்கையிலான பயணிகள், குறுகிய நேரத்தில் குறித்த இடத்தை சென்றடைதல், மரியாதையான, நட்பு மற்றும் கவர்ச்சிகரமான போக்குவரத்தை வழங்குதல் ஆகியவை இந்த திட்டத்தில் அடங்கும்.

பயணிகள் தங்கள் வாகனங்களை பன்முக மத்திய நிலையத்திற்கு சொந்தமான வாகன தரிப்பிடத்தில் இலவசமாக நிறுத்தலாம்.

திட்டத்தின் முன்னேற்றத்தை கருத்திற் கொண்டு தரிப்பிட வசதியை விரிவாக்க எதிர்பார்க்கப்படுகிறது. காலை 06.00 மணி முதல் 08.00 மணி வரையும், மாலை 04.00 மணி முதல் 09.00 மணி வரை ஒவ்வொரு 15 நிமிடங்களுக்கு ஒரு முறை பஸ்கள் இயக்கப்படுகின்றன.

காலை 08.00 மணி முதல் மாலை 04.00 மணி வரை ஒவ்வொரு 25 நிமிடங்களுக்கு ஒரு தடவை பஸ் சேவை இடம்பெறும். ஒரு நாளைக்கு 64 பயணங்கள் மேற்கொள்ளப்படும்.

வாகன ஒழுங்குறுத்துகை, பஸ் போக்குவரத்துச் சேவைகள் மற்றும் புகையிரதப் பெட்டிகள் மற்றும் மோட்டார் வாகன கைத்தொழில் இராஜாங்க அமைச்சு மற்றும் இலங்கை போக்குவரத்து சபை இணைந்து பொதுப் போக்குவரத்து சேவையை நடைமுறைப்படுத்துகின்றன.

தேசிய போக்குவரத்து ஆணைக்குழு, இலங்கை பொலிஸ், வீதி அபிவிருத்தி அதிகார  சபை, நகர அபிவிருத்தி அதிகார சபை மற்றும் கொழும்பு நகர சபை ஆகியன இதற்கு பங்களிப்பு செய்கின்றன.

இந்த திட்டம் எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது மற்றும் பஸ் நேர அட்டவணை குறித்து அறிய போக்குவரத்து அமைச்சினால் அறிமுகப்படுத்தப்பட்ட விசேட செயலி குறித்து ஜனாதிபதிக்கு விளக்கமளிக்கப்பட்டது.

புதிய சேவைக்காக பயன்படுத்தப்படும் பஸ் வண்டியொன்றில் பயணம் செய்த ஜனாதிபதி அதன் வசதிகளை கண்காணித்தார். ஒரேஞ்சு நிறுவனம் இத்திட்டத்துடன் இணைந்ததாக பன்முக போக்குவரத்து மையத்தில் அமைத்துள்ள நிலையத்தை ஜனாதிபதி திறந்து வைத்தார்.

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

More Stories
இனி வாரத்தில் 4 நாட்கள் வேலை செய்தால் போதும்! வெளியான செய்தி!