வவுனியாவில் மேலும் அதிகரித்த கொவிட்-19 தொற்று!

வவுனியாவில் மேலும் நான்கு பேருக்கு இன்று மதியம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வவுனியா, பட்டானிச்சூர் மற்றும் நகர வர்த்தக நிலையப் பகுதிகளில் கடந்த ஒரு வாரத்தில் 124 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதையடுத்து நகரின் பல்வேறு பகுதிகளிலும் பி.சீ.ஆர் பரிசோதனைகள் கடந்த வெள்ளிக்கிழமை முதல் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இதில் கடந்த சனிக்கிழமை மில் வீதியில் மேற்கொண்ட பி.சீ.ஆர் பரிசோதனையில் இருவருக்கும், வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் மேற்கொள்ளப்பட்ட பி.சீ.ஆர் பரிசோதனையில் இருவருக்கும் என நான்கு பேருக்கு இன்று மதியம் (12.01) கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் கடந்த ஒரு வாரத்தில் 128 பேர் வவுனியாவில் கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர். இதேவேளை, வவுனியா நகரம் மற்றும் அதனுடன் இணைந்த பகுதிகள் இன்று (12.01) முதல் முழுமையாக முடக்கப்பட்டுள்ளதுடன் வவுனியா நகரக் கோட்டத்திற்கு உட்பட்ட பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் கொரோனா தொற்றாளர்கள் அதிகரித்து வரும் நிலையில் வவுனியா நகரினை முடக்குவதற்கு தாம் பரிந்துரை செய்துள்ளதாக வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் வைத்தியர் மகேந்திரன் தெரிவித்தார்.

வவுனியா மாவட்டத்தில் கொவிட்-19 அவசர கால நிலமைகள் தொடர்பில் அரசாங்க அதிபர் தலைமையில் இன்றையதினம் விசேட கூட்டம் ஒன்று இடம்பெற்றது.

குறித்த விடயம் தொடர்பாக மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளரிடம் கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்..

வவுனியா பிரதேச செயலாளர் பிரிவில் 19 கிராம சேவகர் பிரிவுகளில் முழுமையான முடக்கத்தினை முன்னெடுக்குமாறு அரச அதிபருக்கு பரிந்துரை செய்துள்ளோம்.

அந்தவகையில் A9வீதியில் நொச்சிமோட்டை பாலம், மற்றும் இரட்டை பெரியகுளம் பகுதியில் அமைந்துள்ள நகரசபையின் வரவேற்பு வளைவு, மன்னார் வீதியில் நெளுக்குளம் பொலிஸ்நிலையம், பூந்தோட்டம் சந்தி, மாமடு சந்தி ஆகிய பகுதிகள் பொலிசாரால் முடக்கப்படும்.

 

குறித்த பகுதிகளால் வவுனியா நகருக்கு உள்ளேவரும் பொதுமக்களுக்கு தடைவிதிக்கப்படும். இன்றிலிருந்து இரண்டு கிழமைகளிற்கு இந்த நடைமுறை நீடிக்கும்.

அவசர தேவைகள், அத்தியாவசிய தேவைகள், அரச ஊழியர்கள் வந்து செல்வதற்கு அனுமதி வழங்கப்படும். அத்துடன் வெளி மாவட்டங்களில் இருந்து வருகைதரும் பேருந்துகள், முடக்கப் பகுதிக்குள் நிறுத்தாமல் செல்வதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இது தொடர்பான பரிந்துரைகளை நாம் அனுப்பியுள்ளோம். ஏனைய நடவடிக்கைகளை அரச அதிபர் முன்னெடுப்பார் என்று தெரிவித்தார்.

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

More Stories
வாகனம் மோதியதில் தாயும் குழந்தையும் பலி