வவுனியா நகரம் பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகள் கிடைக்கும் வரை முடக்கப்படும்

வவுனியா நகரில் அமைந்துள்ள வியாபார நிலையங்களில் பணிபுரியும் ஊழியர்களிற்கு பி.சி.ஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டு அதன் முடிவுகள் கிடைக்கப்பெற்றதன் பின்னரே வவுனியா நகரின் முடக்க நிலை தளர்த்தப்படும் என வவுனியா மாவட்ட மேலதிக அரச அதிபர் தி.திரேஸ்குமார் தெரிவித்துள்ளார்.

வவுனியா நகரில் கொவிட் -19 நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் இது தொடர்பான அவசர கலந்துரையாடல் ஒன்று வவுனியா மாவட்ட செயலகத்தில் நேற்று (09.01.2021) இடம்பெற்றது.

இதன் பின்னர் ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், வவுனியா நகரில் 54 கொவிட் தொற்றாளர்கள் உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றிருந்தது.

அதன்படி சில தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் நகரில் அமைந்துள்ள வியாபார நிலையங்களில் பணிபுரிபவர்களின் சுகாதார தன்மையினை கருத்தில் கொண்டு அவர்களிற்கு பி.சி.ஆர் பரிசோதனை முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அந்த பரிசோதனை முடிவுகள் கிடைக்கும் வரை நகரின் சில பகுதிகளை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் வவுனியா வைத்தியசாலை சுற்றுவட்ட சந்தியில் இருந்து இறம்பைக்குளம் மகளீர் பாடசாலை வரையான சந்தி,

தமிழ் மத்திய மகா வித்தியாலயம் வரையான பகுதி, காமினி மகா வித்தியாலயத்தை உள்ளடக்கிய பகுதிகள் மறு அறிவித்தல் வரை மூடப்படுகின்றது. அது தொடர்பான மேலதிக நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு காவல்துறையினருக்கு அரச அதிபர் பணித்துள்ளார்.

இதேவேளை, பழங்கள் மற்றும் மரக்கறி மொத்த விற்பனையில் ஈடுபடுபவர்கள் நாளையில் இருந்து காமினி மகாவித்தியாலயத்தில் அமைந்துள்ள மைதானத்தில் அதனை முன்னெடுப்பதற்கு ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளது. அந்தவகையில் சாலை ஓரங்களில் வியாபாரம் மேற்கொள்வதும் தடை செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, நகர்ப்புற மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு நகரில் அமைந்துள்ள வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயம், சைவப்பிரகாச மகளிர் வித்தியாலயம், மற்றும் ஆரம்ப பாடசாலை, இறம்பைக்குளம் மகளிர் மகா வித்தியாலயம், இலங்கை திருச்சபை தமிழ் கலவன் பாடசாலை,

காமினி மகா வித்தியாலயம், முஸ்லிம் மகாவித்தியாலம் மற்றும் ஆரம்ப பாடசாலை ஆகிய ஏழு பாடசாலைகள் மறு அறிவித்தல் வரை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

More Stories
புடைவைக்கடையில் பணியாற்றிய எட்டுப்பேருக்கு கொவிட்-19 தொற்று! : எங்கு தெரியுமா?