ஏர் இந்தியா மகளிர் விமானிகள் 4 பேர் அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில் இருந்து பெங்களூருவுக்கு வடதுருவத்தின் வழியாக முதன் முறையாக விமானத்தை இயக்குகின்றனர்.
வட துருவத்தின் வழியாக உலகின் மிக நீளமான விமானப் பாதையை ஏர் இந்தியாவின் இளம் பெண் கேப்டன் சோயா அகர்வால் தலைமையிலான பெண் விமானிகள் கடந்து வரலாற்றுச் சாதனைப் படைக்க உள்ளனர்.
உலகின் நீளமான விமானப் பாதைகளுள் ஒன்று சான் பிராசிஸ்கோ முதல் பெங்களூரு இடையிலான பாதை. சுமார் 16,000 கிலோ மீட்டர் நீளமுடைய சவால் நிறைந்த இந்த நீளமான பாதையை பனிபடர்ந்த வட துருவத்தின் வழியாகவே கடக்க வேண்டும். மேலும் சான்பிராசிஸ்கோவில் இருந்து புறப்படும் இந்த நீண்ட விமானப் பயணம் இடையே எங்கும் நிற்காமல் பெங்களூருவுக்கு வந்தே தரையிறங்கும்.
இத்தகைய சவால் நிறைந்த உலகின் நீளமான தூரத்தை கடப்பதற்கு அதிகப்படியான திறமையும், அனுபவமும் அதோடு தொழில்நுட்பத்தை நன்றாக பயன்படுத்தக் கூடிய விமானிகளால் மட்டுமே முடியும். பல காலமாக இது போன்ற நீளமான விமானப் பாதையில் விமானம் இயக்குவதற்கு ஆண் விமானிகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வந்தனர்.
ஆனால் தற்போது வரலாற்றில் முதன் முறையாக பெண் விமானிகள் கூட்டாக இணைந்து வடதுருவத்தின் மேலான இந்த நீளமான பாதையில் பறக்க உள்ளனர். அதுவும் இந்த விமானப் பயணத்தை தலைமையேற்று வழிநடத்தும் பொறுப்பு சோயா அகர்வால் என்ற பெண் கேப்டனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஏர் இந்தியாவின் பெண் கேப்டனான சோயா அகர்வால் கூறுகையில், “உலகில் பெரும்பாலான மக்கள் தங்கள் வாழ்நாளில் வட துருவத்தையோ அல்லது அதன் வரைபடத்தையோ கூட பார்த்திருக்க மாட்டார்கள். ஆனால் நாங்கள் அதன் மேல் வெற்றிகரமாக பறக்க இருக்கிறோம்.
சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் மற்றும் ஏர் இந்தியா நிறுவனம் என்மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர். போயிங் -777 விமானத்தில் கேப்டனாக கட்டளையிட இது ஒரு பொன்னான வாய்ப்பு. அதுவும் வட துருவத்தின் மீது உலகின் மிக நீண்ட விமானப் பாதையில் பறப்பது மகிழ்ச்சிக்குரிய ஒன்றாகும்” என்று கூறியுள்ளார்.
மேலும், ”என்னுடன் தன்மாய் பாபகரி, ஆகான்ஷா சோனவனே மற்றும் சிவானி மன்ஹாஸ் ஆகியோர் அடங்கிய அனுபவம் வாய்ந்த பெண் விமானிகள் இருப்பது மிகவும் பெருமையளிக்கிறது.
பெண் விமானிகள் ஒரு அணியாக சேர்ந்து வட துருவத்தின் மீது பறந்து வரலாற்றை உருவாக்குவது இதுவே முதல் முறையாகும். உண்மையில் எந்தவொரு தொழில்முறை விமானிக்கும் இது பெரும் சாதனை கனவாகும்” என்று கூறியுள்ளார்.
சோயா அகர்வால் ஏற்கெனவே கடந்த 2013 ஆம் ஆண்டு போயிங் -777 விமானத்தில் இளைய பெண் விமானியாக பறந்து சாதனைப் படைத்துள்ளார்.
தற்போது துருவப் பாதை வழியாக இதுவரை எத்தனையோ விமானிகளும், விமானங்களும் பறந்திருந்தாலும் முதன்முறையாக பெண் விமானிகள் அடங்கிய குழு பறப்பது பெரும் சாதனை நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.
கேப்டன் சோயா அகர்வால் தலைமையில் கடல் கடந்து, கண்டங்களை தாண்டி போயிங் -777 விமானத்தை இயக்கும் அக்னி சிறகுகள் தை 9ம் திகதி இன்று பெங்களூர் விமான நிலையத்தை அடைந்து வரலாற்றுச் சாதனைப் படைப்பார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது