யாழ் பல்கலைக்கழத்தில் முள்ளிவாய்க்கால் நினைவிடம் இரவோடு இரவாக இடித்துத் தகர்க்கப்பட்டமைக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள அவர்,
குறித்த செய்தி தனக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை, முள்ளிவாய்க்காலில் இறுதிக்கட்டப் போரில் இரக்கமின்றி கொல்லப்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நினைவாக யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த நினைவு தூண் இரவோடு இரவாக இடிக்கப்பட்டுள்ள செய்தி பேரதிர்ச்சி அளிக்கிறது. (1/2)
— Edappadi K Palaniswami (@EPSTamilNadu) January 9, 2021
உலக தமிழர்களை பெரும் வேதனையில் ஆழ்த்தியுள்ள இலங்கை அரசின் இந்த மாபாதக செயலுக்கும் அதற்கு துணை போன யாழ்ப்பாண பல்கலைக்கழக துணை வேந்தருக்கும் அவர் கண்டனமும் வெளியிட்டுள்ளார்.
துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பதிவிட்டுள்ள அறிக்கையில், இலங்கைப் போரில் உயிரிழந்த தமிழர்களின் நினைவாக யாழ்ப்பாண பல்கலையில் அமைக்கப்பட்ட நினைவுத்தூண் நேற்று நள்ளிரவில் இடித்து தகர்க்கப்பட்டுள்ளது மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது என்று பதிவிட்டுள்ளார்.
இலங்கைப் போரில் உயிரிழந்த தமிழர்களின் நினைவாக யாழ்ப்பாண பல்கலையில் அமைக்கப்பட்ட நினைவுத்தூண் நேற்று நள்ளிரவில் இடித்து தகர்க்கப்பட்டுள்ளது மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. pic.twitter.com/Mq6TI8XSA6
— O Panneerselvam (@OfficeOfOPS) January 9, 2021
ஈழப்போரில் ஈவு இரக்கமின்றி கொத்துக் கொத்தாக கொல்லப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க போராடிக் கொண்டிருக்கிற வேளையில், தமிழர்களின் உணர்வை மேலும் ரணப்படுத்தும், இனவெறியினரின் இந்த இழிசெயல் கடும் கண்டனத்திற்குரியது. ஏற்றுக்கொள்ள முடியாத இக்கொடுஞ்செயலை மிகவும் வன்மையாகக் கண்டிக்கிறேன் என்றும் ஓ.பன்னீர் செல்வம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இதேவேளை வெந்தப்புண்ணில் வேலைப்பாய்ச்சுவது போல நிகழ்த்தப்பட்டிருக்கும் இந்தச் சம்பவத்தை வன்மையாக கண்டிப்பதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
ஈழப்பேரழிவை சந்தித்து நிற்கும் தமிழர்களை சீண்டும் வகையில் யாழ்ப்பாண பல்கலைக்கழத்திலுள்ள முள்ளிவாய்க்கால் நினைவிடம் இரவோடு இரவாக இடித்து தகர்க்கப்பட்டுள்ளது பேரதிர்ச்சி அளிக்கிறது. இனப்படுகொலை செய்த ஆட்சியாளர்களின் தொடர் இனஅழிப்பின் நடவடிக்கையாகத்தான் இதைக் கருதவேண்டியிருக்கிறது. pic.twitter.com/LGyLYRjxpq
— சீமான் (@SeemanOfficial) January 8, 2021
மேலும் அன்றைக்கு யாழ்ப்பாணம் நூலகம் எரிக்கப்பட்டது என்றும் இன்றைக்கு யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்திலுள்ள நினைவிடம் அழிக்கப்பட்டிருக்கிறதென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு ஒற்றை இலங்கைக்குள் எத்தனை ஆட்சி மாறினாலும் தமிழர்களுக்கு இதுதான் நிலை என்பதை இச்சம்பவத்தின் வாயிலாக உலகத்தார் உணர்ந்துகொள்ள வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.