மன்னாரில் காணாமல் போன கிராம உத்தியோகத்தர் சடலமாக மீட்பு!

அருவியாற்றில் குளிக்க சென்று காணாமல் போன கிராம உத்தியோகத்தரின் சடலம் அரிப்பு பகுதியில் கரை ஒதுங்கியது.

அருவியாற்றுப் பாலத்தின் அடியில் சமையல் செய்து வருட இறுதி கொண்டாட்டத்தில் ஈடுபட்ட நிலையில் கடந்த 29 ஆம் திகதி மதியம் ஆற்றில் குளிக்க முற்பட்ட போது சுழிக்குள் அகப்பட்டு காணாமல் போன கிராம அலுவலகர் இன்று (31.12.2020) காலை அரிப்பு பழைய தோனித்துறை பகுதியில் சடலமாக கரை ஒதுங்கியுள்ளது.

காணாமல் போய் தற்போது சடலமாக மீட்கப்பட்ட கிராம அலுவலகர் நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள தோமஸ்புரி கிராம உத்தியோகத்தர் பிரிவில் கிராம உத்தியோகத்தராக கடமையாற்றும் ஜனார்த்தனன் (வயது-26) என தெரிய வந்துள்ளது.


நான்கு கிராம உத்தியோகத்தர்கள் உள்ளடங்களாக 6 பேர் கடந்த 29 ஆம் திகதி மதியம் அருவியாற்றுப் பாலத்தின் அடியில் சமையல் செய்து வருட இறுதி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் ஆற்றில் குளிக்கும் போது போதையில் இருந்ததாகவும் குளித்த இடத்தில் மதுப் போதத்தல்களும் சமைத்த உணவுகளும் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதன் போது கிராம உத்தியோகத்தர்கள் ஆற்றில் குளித்த போது ஒரு கிராம உத்தியோகத்தர் காணாமல் போனதோடு, ஏனைய கிராம உத்தியோகத்தர்கள் மீட்கப்பட்டனர்.


காணாமல் போன கிராம உத்தியோகத்தர் நானாட்டான் கட்டைக்காட்டு பகுதியை சேர்ந்தவர் என தெரிய வந்துள்ளதோடு அவரை தேடும் பணி 2 ஆவது நாளாக நேற்று (30) மாலை வரை தேடியுள்ளனர்.

கடற்டை மற்றும் வங்காலை, அரிப்பு கிராம மீனவர்களும் இணைந்து தேடுதல்களை மேற்கொண்டனர்.

எனினும் மீட்கப்படவில்லை. இந்த நிலையில் இன்று (31) காலை அரிப்பில் இருந்து கடல் தொழில் நடவடிக்கைக்காக சென்ற மீனவர்கள் குறித்த சடலத்தை கண்டு அரிப்பு ஆலய நிர்வாகத்திற்கு தெரியப்படுத்திய நிலையில், அருவி ஆற்றில் காணாமல் போன கிராம அலுவலகர் அரிப்பு பழைய தோனித்துறை பகுதியில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த ஆற்று பகுதியில் குளிக்கச் சென்று பலர் உயிரிழந்துள்ள நிலையில் அருவியாற்றில் குளிப்பது ஆபத்தானது என நானாட்டான் பிரதேச சபையால் எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ள நிலையில் அதனையும் மீறி கிராம அலுவலகர்கள் உள்ளடங்களாக 6 பேரூம் ஆற்றில் குளிக்கச் சென்றுள்ளனர்.

இந்த நிலையிலே குறித்த அனார்த்தம் இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

More Stories
இலங்கையில் இன்று அதிகரித்த கொவிட்-19 தொற்றாளர்களின் எண்ணிக்கை