மருத்துவ பரிசோதனைக்குச் சென்ற பெண் தனது ஸ்கேன் ரிப்போர்ட்டில் கண்ட காட்சி அவரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அது தொடர்பான புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
பிரிட்டனைச் சேர்ந்தவர் ஹோலி கில்ஸ். இவர் கர்ப்பமாக உள்ள நிலையில் தனது 20 வாரப் பரிசோதனைக்காகக் கடந்த 9ம் தேதி மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். அப்போது அவருக்கு அல்ட்ரா சவுண்ட் பரிசோதனை செய்யப்பட்டது. அந்த நேரம் அங்குப் பரிசோதனை செய்து கொண்டிருந்த மருத்துவர் ஒருவர் ‘ஓ மை காட்’ என கூறியுள்ளார். இதையடுத்து என்ன நடக்கிறது என்பது புரியாமல் ஸ்கேன் திரையை ஹோலி பார்த்தபோது அவருக்கு எதிர்பாராத இன்ப அதிர்ச்சி காத்திருந்தது.
அதில் கர்ப்பப்பை உள்ளே இருக்கும் குழந்தை, கட்டை விரலை உயர்த்தி, ‘தம்ஸ் அப்’ காட்டுவதைப் போல இருந்தது. உடனே ஹோலியுடன் பரிசோதனைக்கு வந்த அவரது நண்பர் அதைத் தனது மொபைல் போனில் போட்டோ எடுத்துள்ளார். இந்த காட்சியைச் சற்றும் எதிர்பாராத ஹோலி, ”இதற்கு முன்பு இதுபோன்ற காட்சியை எனது வாழ்நாளில் பார்த்ததே இல்லை. 16 வயதில் எனது தாயை நான் இழந்தேன். அதன் துக்கம் எனது மனதில் இப்போது கூட இருக்கிறது.
ஆனால் எனது குழந்தையின் சைகை என்னை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. உனக்காக நான் இருக்கிறேன், நீ கவலைப்படாதே எனக் கூறுவதைப் போல உள்ளது. எனது குழந்தையைப் பார்க்க ஆவலாக உள்ளேன். அந்த குழந்தை நிச்சயம் எனது தாயின் பரிசு தான்” என நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.