அவுஸ்ரேலியாவின் சிட்னியில் உள்ள ஒரு குடும்பம் டோமினோஸின் போட்டிக்கான நிபந்தனைகளை பூர்த்தி செய்து 60 ஆண்டுகளுக்கான பீட்சாவிற்குரிய பரிசுத் தொகையை வென்றுள்ளது.
பிரபல பன்னாட்டு பீட்சா விற்பனை நிறுவனமான டோமினோஸ் பீட்சா (Domino’s Pizza) தங்களது 60வது ஆண்டு விழாவைக் கொண்டாட மார்கழி 9ஆம் தேதி பிறக்கும் குடும்பத்தின் முதல் குழந்தைக்கு ஆண் குழந்தையாக இருந்தால் டொமினிக் எனவும், பெண் குழந்தையாக இருந்தால் டொமினிக்யூ எனவும் பெயரிட்டால் அந்த குழந்தைக்கு 60 ஆண்டுகள் பீட்சா கிடைக்கும் அளவிற்கான பணத்தைப் பரிசாக வழங்குவதாக அறிவித்திருந்தது.
அவுஸ்ரேலியாவில் மாதத்திற்கு 14 டொலர் விலையுள்ள ஒரு பீட்சா என்ற கணக்கில் 60 ஆண்டுகளுக்கு 10,080 அவுஸ்ரேலியா டொலர் இதில் பரிசுத் தொகையாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதன் இலங்கை மதிப்பு சுமார் ரூ 14 லட்சம் ஆகும்.
இந்நிலையில் அவுஸ்ரேலியாவைச் சேர்ந்த தம்பதிகளான சிலிமென்டைன் ஓல்டு பீல்டு – ஆண்டனி லாட் தம்பதிக்கு கடந்த மார்கழி 9ஆம் தேதி அன்று அதிகாலை 1.47 மணிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.அதிலும் குறிப்பாக பிரசவ வலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சிலிமென்டைனுக்கு சுமார் 72 மணி நேரத்திற்குப்பின் டிசம்பர் 9ஆம் தேதி குழந்தை பிறந்துள்ளது.அவருக்குக் குழந்தை பிறப்பதற்கு சுமார் 2 மணி நேரத்திற்கு முன்பு தான் டோமினோஸ் நிறுவனம் இந்த அறிவிப்பை வெளியிட்டிருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.
இதில் சுவாரஸ்யமாக, சிலிமென்டைன் மற்றும் ஓல்ட்ஃபீல்ட் தம்பதிக்கு இந்தப் போட்டியைப் பற்றி தெரியும் முன்னரே அவர்களுடைய முதல் தேர்வாக ‘டொமினிக்’ என்ற பெயரே இருந்துள்ளது. பின்னரே உறவினர் ஒருவர் மூலமாக இந்தப் போட்டி குறித்து அவர்களுக்கு தெரியவந்துள்ளது.
இதையடுத்து அந்த தம்பதி குழந்தைக்கு டோமினிக் என அதிகாரப்பூர்வமாக பெயர் சூட்டி அந்தப் பரிசை வென்றுள்ளனர். இதைத்தொடர்ந்து டோமினோஸ் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், தாங்கள் இப்படி ஒரு வித்தியாசமான போட்டியை அறிவித்து, 2 மணி நேரத்தில் டொமினிக் பிறந்துவிட்டான் என்ற செய்தி எங்களை மகிழ்ச்சியடையச் செய்துள்ளது எனக் கூறியுள்ளது.