இந்தியாவில் கேரளாவையே உலுக்கிய கன்னியாஸ்திரி அபயா கொலை வழக்கு. இந்த சூழ்நிலையில் 28 வருடங்களுக்குப் பிறகு கன்னியாஸ்திரி அபயா கொலை வழக்கில் தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.இது தொடர்பில் இந்திய ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.
கேரள மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்த தாமஸ் மற்றும் லீலா தம்பதியின் மகளான அபயா, அங்குள்ள பயஸ் டென்த் என்ற கான்வென்டில் கன்னியாஸ்திரியாக இருந்தார். இந்நிலையில் கன்னியாஸ்திரி அபயா 1992-ம் ஆண்டு மார்ச் 27-ல் செயின் பயஸ் கான்வென்ட் கிணறு ஒன்றில் இறந்து கிடந்தார். இந்த சம்பவம் குறித்து முதலில் உள்ளூர் காவல்துறையும், பின்னர் குற்றப்பிரிவு காவல்துறையினரும் விசாரணை நடத்தினர். அவர்களின் விசாரணையில் கன்னியாஸ்திரி அபயா தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்பட்டு வழக்கும் முடிக்கப்பட்டது.
ஆனால் தங்கள் மகள் கொலை செய்யப்பட்டுள்ளார் என்றும், இதுகுறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் என்றும் கோரி அபயாவின் பெற்றோர் தாமஸ் மற்றும் லீலா இருவரும் கேரள உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். அதேபோன்று கன்னியாஸ்திரி அபயா உடன் படித்த கன்னியாஸ்திரிகளும் இந்த வழக்கை முறையாக விசாரிக்க வேண்டும் என கூறி போராட்டங்கள் நடத்தினார்கள்.
மேலும் மனித உரிமை ஆர்வலர் ஜோமோன் இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க கோரி கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இதையடுத்து இந்த வழக்கை சிபிஐ விசாரிக்கக் கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனைத்தொடர்ந்து நடைபெற்ற சிபிஐ விசாரணையிலும் அபயா தற்கொலை செய்து கொண்டார் என்றே கூறப்பட்டது.
பின்னர் சென்னையைச் சேர்ந்த சிபிஐ குழு விசாரணையை ஏற்றது. ஆனால் அவர்கள் விசாரணையிலும் ஏதும் தெரியாத நிலையில், 3-வதாக சிபிஐ-ன் மற்றொரு குழு நடத்திய விசாரணையில் தான் கன்னியாஸ்திரி அபயா கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.
கன்னியாஸ்திரி செபி, அபயா தங்கியிருந்த ஆசிரமத்தில் தான் தங்கி இருந்தார். அவருக்கும் பாதிரியார்கள் தாமஸ் கோட்டூர், ஜோஸ் புத்ருக்கயில் ஆகியோருக்கும் தகாத உறவு இருந்ததாகவும் அதை கன்னியாஸ்திரி அபயா பார்த்ததால் அபயா கொலை செய்யப்பட்டதாக சிபிஐ விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து பாதிரியார்கள் தாமஸ் கோட்டூர், ஜோஸ் புத்ருக்கயில், கன்னியாஸ்திரி செபி ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இவ்வழக்கில் பாதிரியார் ஜோஸ் புத்ருக்கயில் மட்டும் கேரளா உயர்நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார். இந்த நிலையில் 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் திருவனந்தபுரம் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் இவ்வழக்கு விசாரணை தொடங்கப்பட்டு முடிவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
28 ஆண்டுகளாக நடைபெற்ற சிபிஐ விசாரணையில் பாதிரியார் கோட்டூர் மற்றும் கன்னியாஸ்திரி செஃபி ஆகியோர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பு வழங்கப்பட்டது. இவர்களுக்கான தண்டனை விவரங்கள் நாளை மறுநாள் அறிவிக்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்த தீர்ப்பு குறித்துப் பேசிய மனித உரிமை ஆர்வலரும், இந்த வழக்கிற்காக ஆரம்பம் முதலே போராடி வருபவருமான ஜோமோன், ”சகோதரி அபயாவின் வழக்கில் இறுதியாக அவருக்கு நீதி கிடைத்துள்ளது. அவரின் ஆத்ம தற்போது நிம்மதி அடையும். பணமும், அதிகாரமும் இருந்தால் எந்த தவறையும் செய்து விட்டுத் தப்பித்து விடலாம் என நினைப்பவர்களுக்கு இந்த தீர்ப்பு ஒரு பாடமாக அமையும் எனக் கூறியுள்ளார்.
இதற்கிடையே சிபிஐயின் விசாரணையில், கன்னியாஸ்திரி அபயா 1992 மார்ச் 27 அன்று அதிகாலை 4.15 மணியளவில் தனது விடுதி அறையிலிருந்து சமையலறைக்குச் சென்றுள்ளார். அந்த 4:15 மணி முதல் அதிகாலை 5 மணிக்குள் தான் கன்னியாஸ்திரி அபயா கடுமையான பொருளால் தாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டு அந்த கொலையை மறைக்க அவரது உடலைக் கிணற்றுக்குள் வீசினார்கள் என சிபிஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முதலில் கன்னியாஸ்திரி அபயா தற்கொலை செய்துகொண்டதாகக் கூறி உள்ளூர் போலீசார் வழக்கை முடித்த நிலையில், பல்வேறு கட்ட போராட்டங்களுக்குப் பின்பு இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது.
வழக்கு சிபிஐ விசாரணைக்குச் சென்ற நிலையிலும் பல தரப்பிலிருந்தும் சிபிஐக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டதாகப் பரவலாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இருப்பினும் சிபிஐ அதிகாரிகள் இந்த வழக்கைத் திறம்பட விசாரணை செய்தார்கள். மேலும் இந்த வழக்கைத் தழுவி மலையாள நடிகர் சுரேஷ் கோபியின் நடிப்பில் க்றைம் ஃப்ளிம் ‘Crime File’ என்ற படமும் வெளியானது.
தற்போது 28 ஆண்டுகளுக்குப் பிறகு கன்னியாஸ்திரி அபயாவுக்கு நீதி கிடைத்துள்ளதாகப் பலரும் சமூகவலைத்தளங்களில் தங்களது கருத்துக்களைப் பதிவிட்டு வருகிறார்கள்.