வவுனியாவில் கொவிட்-19 தனிமைப்படுத்தலுக்குட்பட்ட குடும்பங்களிற்கு அரசினால் எந்தவிதமான நிவாரணங்களும் வழங்கப்படாதமையினால் பல்வேறு அசௌகரியங்களிற்கு உள்ளாகியுள்ளனர்.
கடந்தவாரம் வவுனியா திருநாவற்குளத்தை சேர்ந்த காவல்துறை உத்தியோகத்தர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு கொவிட்-19 வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. இதனையடுத்து குறித்த குடும்பத்துடன் தொடர்புகளை பேணிய பலர், திருநாவற்குளம் பகுதியில் தனிமைப்படுத்தலிற்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு 6 நாட்கள் கடக்கின்ற நிலையிலும் அவர்களுக்கு எந்த விதமான நிவாரண உதவிகளும் கிடைக்கப்பெறவில்லை.
இதேபோன்று கற்குழியில் கொவிட்-19 தொற்றிற்குள்ளான மாணவியுடன் தொடர்புகளை பேணியதாக பூந்தோடம் ஶ்ரீநகர் கிராமத்திலும் சிலகுடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. அவர்களிற்கான எந்தவித நிவாரணங்களும் இதுவரை வழங்கப்படவில்லை.
கூலித்தொழிலை நம்பி இருக்கும் குறித்த குடும்பங்கள் தனிமைப்படுத்தல் காரணமாக வெகுவாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களிற்கான உதவிகளை அதிகாரிகள் வழங்கவேண்டும் என்பது கோரிக்கையாக உள்ளது.